Saturday, 1 August 2020

மருதநாயகம் பிள்ளை

1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் கமாந்தோ கான். இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ்பெற்றவர் என்றால், முகமது யூசுப்கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன். ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. கட்டுக் கடங்காமல் சுற்றித்திறிந்த யூசுப்கான் பாண்டிச்சேரிக்கு வந்து அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தான். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தான். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டான் அங்கு தண்டல் காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வை உழைப்பால் அடைந்தான். ஆற்காட்டில் சந்தா சாஹிப்புடன் வந்து தங்கி இருந்தபோது யூசுப்கானிடம் இருந்த வீரம், விவேகத்துடன் காதலும் சேர்ந்து கொண்டது. இந்தோ ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான்.

திறமைக்கு திறவுகோல்

1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடியுத்தம் நடந்த காலம். அதேநேரத்தில் 1751இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் போட்டியும் யுத்தமும் மூண்டது. முகமது அலி வாலாஜா திருச்சிக்கு தப்பித்து ஆங்கிலேயர்களிடம் சரண்அடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட்கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினான். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தான். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தாசாஹிப் படைதோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரை மற்றும் நெல்லையில் வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தான் நவாபு.

யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமை கண்டு வியந்தான் இராபர்ட்கிளைவ் தனது படையுடன் அவனை இணைத்தான். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தான். 1755ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காக தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டான்.

எட்டயபுரம், பாஞ்சாலங்குறிஞ்சி படைகளின் தளபதியாக இருந்த “வீரன்’’ அழகு முத்துக்கோனை, பெருநாழிகாட்டில் முகமது யூசுப்கான் சாகடித்தான். மறவர் பாளையங்களை தாக்கி வெற்றி கொண்டான். பூலித்தேவனை தோற்கடித்தான். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றான். தனது வெற்றிப் பயணத்தை தடைகளைத் தகர்த்து தொடர்ந்தான். இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டான். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தான். இந்த தாக்குதல்பற்றி லாலி கூறுகையில், யூசுப்கான் தலைமையிலான படைகள் ஈக்களைப் போல் பறந்தார்கள் ஒரு பக்கத்தில் தடுத்து தாக்கிட முயலும்போது, அடுத்த நிமிடம் மறுபக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூறினார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. கிழக்கிந்திய கம்பெனி முகமது யூசுப்கானுக்கு “கமாண்டன்ட்’’ பதவி உயர்வை அளித்தது.

மதுரையின் மகுடத்தில்

கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறினர். யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கான் சென்னையில் இருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களை எல்லாம் சூறையாடி இருந்தனர். யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினான். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தான். நிதித்துறை மற்றும் வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினான். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். அவர்களின் உள்ளங்களிலேயே குடியேறினான். இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர்.

நவாப்பின் நயவஞ்சகம்

முகமது யூசுப்கானின் செல்வாக்கை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சித்தான் திடீரென புதிய உத்தரவைப் பிறப்பித்தான். வணிகர்களும், மற்றவர்களும் என் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். யூசுப்கான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தினர். நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தனர். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட முன்வந்தான்.

நவாபும், கம்பெனியும் எற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. தெற்கு சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளான் என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும், நவாபும் யூசுப்கானை கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினான் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தான். அவனுக்கு ஆதரவாக பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

துரோகத்தின் வெற்றி

துரோகம் பல நேரத்தில் வீரம் செறிந்த போரின் முடிவை விரைவுபடுத்திவிடும், வீரர்கள் யுத்தக்களத்திலே வீழ்வதை தடுத்திடும். இங்கே யூசுப்கானுக்கும் அதுதான் நேர்ந்தது. 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர் தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கும்பினியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கும்பினியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது.
மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.

முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் பாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. சரணடைய பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தான். இந்த அவமானத்தை பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட், யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினான். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதிமார்சன் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமினர். சரணடைவோருக்கும், சண்டையிட்டு மடிய விரும்பியவர்களுக்கும் இடையே துரோகத்தை அரங்கேற்றினர்.
1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன், இன்னும் சிலர் யூசுப்கானை அவனது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும், துரோகிகளிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. அவனைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர்.

உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டடப்பட்டு கான்சாஹிப் பள்ளி வாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர். கும்பினியர்களை எதிர்த்ததால் முதன்முதலாக தூக்கிலிப்பட்ட வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றான். தன்னை “சுதந்திர ஆட்சியாளன்’’ என்று பறைசாற்றி கும்பினியர்களுடன் போரிட்டான் வீரமரணம் எய்தினான் 40 வயதே நிரம்பிய “கமாந்தோ கான்’’


சிறுகுடி வேளாளர்

சிறுகுடி வேளாளர்

சங்க இலக்கியங்கள் தொல்குடி, முதுகுடி, பெருங்குடி, சிறுகுடி என்று கூறுகின்றது.
சிறுகுடி என்பதற்கு சிறு சாதி என்று அர்த்தம் அல்ல அவர்கள் வேளிரை போன்ற குறுநிலை மன்னர்கள் என அர்த்தம்.
குறிஞ்சி திணை அடிப்படையில் இல்லத்துப் பிள்ளைமார்கள் சிறுகுடி வேளாளர். மருத திணை அடிப்படையில் வேளாளர்கள் என்பது மற்றவர். குறிஞ்சி திணைக்குரியது தான் மலையும் மலை சார்ந்த இடம் சிறுகுடி, மேலும் வில்லவர், தீயர் என்ற அடிப்படையிலும் தாய் வழி‌ சமூகம் என்பதாலும் நாங்கள் சிறுகுடி. திய்யா என்ற திசா வழியில் நாகர் இனத்தை சார்ந்த வேளாளர் நாங்கள் இதன் அடிப்படையில் தான் #சிறுகுடி_வேளாளர் என்று அழைக்கபடுகிறோம்.
திணை என்ற சொல் உயர்ந்த பொருளிலேயே சங்க இலக்கியங்களில் ஆளப்பெற்றுள்ளது. அக்கால ஒழுக்கக் கோட்பாடுகளின்படின் நானிலத் திணைக் குடிகளும் அடிமைகளுக்குரிய ஒழுக்கக் கோட்பாட்டினைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. குடி, குடும்பம் என்ற அமைப்பைப் பின்பற்றியவர்களாகவே இருந்திருக்க வேண்டும். இக்குடிகளுள் #பெருங்குடி, #சிறுகுடி என்ற பிரிவுகள் இருந்தன. #சிறுகுடி என்பது நெகிழ்ச்சியான குடும்ப அமைப்பை உடையதாகும்.
சிறுகுடி பாக்கம் குறிஞ்சி நிலத்தினில்
பெருங்குடி அமைத்திட்ட குன்ற குறவோர்
மறுகுடி உலகில் தழைத்து ஓங்கிட
திருவடி அடைந்தனர் சேயோன் இடத்தே - குறிஞ்சி திணை


Monday, 25 July 2011

இல்லத்துப் பிள்ளைமார் சமுதாய வரலாறு.

இல்லத்துப் பிள்ளைமார் சமுதாய வரலாறு.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் அதிகமாகவும் மற்ற மாவட்டங்களில் குறைவாகவும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஈழவர், இல்லத்தார், பணிக்கர் என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆயுர்வேத மருத்துவர்களாகவும், படைவீரர்களாகவும், களரி பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது. சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர்.இவர்களில் சிலர் களரி பயட்டு விளையாட்டில் சிறந்து விளங்கினர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த ஏனாதி நாயனார் அரசர்களுக்கு வாட்படை பயற்சி அளிக்கும் போர்த்தொழில் ஆசிரியராய் இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அனைத்துச் சமுதாயத்திலும், ஒவ்வொரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் தந்தையை மையமாக வைத்து உறவுமுறைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் சமூகத்தின் முக்கிய நடைமுறைகளான குடிவழி, இருப்பிடம், குடும்ப நிர்வாகம், சொத்துரிமை போன்றவை தந்தை வழி முறையிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றிலிருந்து மாறுபட்டு ஒவ்வொரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் தாயை மையமாக வைத்து உறவுமுறைகள் உருவாக்கப்படும் தாய் வழிச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. இதில் இல்லத்துப் பிள்ளைமார், கோட்டைப் பிள்ளைமார், செவலைப் பிள்ளைமார், நன்குடி வெள்ளாளர், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர், அரும்புக்கட்டி வெள்ளாளர், ஆம்பநேரி மறவர், காரண மறவர், ஆப்பநாடு கொண்டையங்கோட்டை மறவர் என்று சில சமூகம் மட்டும் குறிப்பிடத் தக்கதாய் உள்ளது.

இந்தச் சமூங்களிலும் இருப்பிடம், குடும்ப நிர்வாகம் சொத்துரிமை போன்றவை தமிழகத்தின் பெரும்பான்மைச் சமுதாயங்களின் தந்தை வழி முறையிலான நடைமுறைகளில் இருப்பதைப் போல் மாறிப் போய் விட்டது. ஆனால் குடும்ப உறவு முறைகளான குடிவழி மட்டும் தாய் வழியிலேயே தொடர்ந்து வருகிறது. இதனால் தந்தை வழிச் சமூக மக்களிடமிருக்கும் அக்காள் மகளை மணந்து கொள்ளும் வழக்கம் இவர்களுக்கு நேரெதிராக இருக்கிறது. இதற்கு காரணமென்ன? இவர்கள் தங்களுக்குள் உறவுமுறைகளை எப்படி உருவாக்கி இருக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக தாய் வழிமுறையிலான உறவு முறையைக் கொண்ட சமுதாயத்தில் ஒன்றான இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம் தோன்றிய வரலாற்றுக் கதையையும் அவர்களது உறவு முறைகளையும் பார்ப்போமா?

இல்லத்துப் பிள்ளைமார் வரலாறு

சிவபெருமான்-கங்காதேவிக்கு மகனாகப் பிறந்தவர் வீரபத்திரர். இவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவபெருமான், இந்திரனை அழைத்து வீரபத்திரருக்குத் தகுந்த பெண் பார்த்து வர கட்டளையிடுகிறார். இந்திரனும் தனது தேவதூதர்களை அனுப்பி பெண் தேடுகிறார்.

பூவுலகில் பெண் தேடி வந்த தேவதூதர்கள் ஈழநாட்டின் வீரைப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்நாட்டின் இயற்கை வளத்தையும் அழகையும் கண்டு வியந்த அவர்கள் ஈழநாட்டு மன்னன் இராமராசர் மகளான இளவரசி கயல்மணிதேவியின் அழகைக் கண்டு திகைத்துப் போய் விட்டனர். வீரபத்திரருக்கு ஏற்ற மணமகளாக கயல்மணி தேவி தோன்றவே அவர்கள் விரைந்து வந்து இந்திரனிடம் சொல்ல, அவரும் ஈழ நாட்டுக்குச் சென்று மன்னர் இராமராசரிடம் சிவபெருமான் மகனான வீரபத்திரருக்கு கயல்மணிதேவியை மணமுடித்துக் கொடுக்க வேண்டினார்.

மன்னர் இராமராசரும் தனது மகள் கயல்மணிதேவியை சிவபெருமான் மகனான வீரபத்திரருக்கு மணமுடித்துக் கொடுக்கச் சம்மதித்தார். குறிக்கப்பட்ட நாளில் தேவலோகத்தவர், பூலோகத்தவர் என்று அனைவரது முன்னிலையிலும் வீரபத்திரர்-கயல்மணிதேவி திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்வாழக்கையின் பயனாக இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்குச் சிவருத்திரர் என்று பெயரிட்டனர். சிவருத்திரருக்கு ஒரு வயதான போது வீரபத்திரர் இல்வாழ்க்கையிலிருந்து துறவு வாழ்க்கைக்குச் செல்லத் தீர்மானித்தார்.

கயல்மணிதேவியை அழைத்த வீரபத்திரர் தான் துறவு செல்லப் போவதாகத் தெரிவித்தார். இதைக்கேட்ட கயல்மணிதேவி அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் கணவரின் எண்ணத்திற்கு தடை தெரிவிக்க விரும்பாமல் தானும் குழந்தையும் என்ன செய்வது என்று அவரிடமே கேட்டார்.

காஞ்சிபுரம் அருகே ஆப்பனூர் என்ற ஊரில் பூத்தொடுத்து வாழ்ந்து வரும் வயதான சிவகாமியிடம் சென்று அவளுடன் சேர்ந்து பூத்தொடுத்து வாழ்ந்து கொள். சிவருத்திரர் சில ஆண்டுகளில் அனைத்துக் கலைகளையும் கற்று சிறப்பாக வாழ்வதுடன் ஒரு புதிய குலம் தோன்ற காரணமாக வாழ்வார் என்றும் வாழ்த்தி விட்டு துறவு சென்றார்.

கயல்மணிதேவியும் தன் குமாரனை அழைத்துக் கொண்டு வீரபத்திரர் சொன்ன காஞ்சிபுரம் அருகிலுள்ள ஆப்பனூர் கிராமத்திற்குச் சென்றார். வயதான கிழவி சிவகாமியுடன் சேர்ந்து பூத்தொடுக்கும் பணியைச் செய்து வந்தார். முகள் கயல்மணிதேவியைக் காணாது ஈழ மன்னர் இராமராசர் கவலையடைந்து தனது மகனை மன்னராக்கினார். இந்நிலையில் கயல்மணிதேவி சிவபெருமானிடம் வேண்டி அவரிடமிருந்து தனது மகனுக்கு வெற்றிமணி வில்லும், வீரசக்தி வாளும் பெற்றதுடன் அவரை குருகுலக் கல்விக்கும் அனுப்பினார்.

அனைத்துக் கலைகளிலும் சிறுவயதிலேயே தேர்ச்சி பெற்ற சிவருத்திரர் தன் தாயிடம் வந்து பக்கத்து நாடுகளுக்கு திக்குவிஜயம் செய்யப் போவதாகத் தெரிவித்தார். சிறுவனான சிவருத்திரர் இப்படி சொல்லியது தாய் கயல்மணிதேவிக்கு வருத்தமாக இருந்தாலும் சிவருத்திரரிடம் சிவபெருமான் அளித்த வில்லும் வாளும் இருப்பதால் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.

சிவருத்திரர் காடு மலைகளைக் கடந்து நள்ளி மாநகருக்குள் நுழைந்தார். போர்க் கோலத்தில் சிறுவன் ஒருவன் வருவது அந்நகர மக்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இந்தத் தகவல் அந்நாட்டு மன்னனுக்கும் சென்றது. மன்னனும் தனது படைவீரர்களை அனுப்பி சிவருத்திரரைக் கைது செய்து வரச் சொன்னார். கைது செய்ய வந்த படை வீரர்கள் சிவருத்திரரின் வில்லுக்கும் வாளுக்கும் பலியாயினர். இதையடுத்து அந்நாட்டு இளவரசர் உக்கிர குமாரன் சிறுபடையுடன் சிவருத்திரரைக் கைது செய்திட வந்தான். இளவரசருடன் வந்த சிறுபடையும் தோற்றுப் போக சிவருத்திரரிடம் இளவரசர் உக்கிர குமாரன் சரணடைந்தான். இந்நிலையில் இருவரும் நண்பர்களானார்கள். சிவருத்திரர் உக்கிர குமாராருடன் சேர்ந்து அரண்மனையிலேயே தங்கினார். அங்கு அரச குலத்தவர்களுக்கு போர்ப் பயிற்சியும் அளித்து வந்தார்.

நள்ளி வேந்தரின் மகளான பளிங்கு மாளிகையில் வசித்த இளவரசி தத்தைக்கு நடனம், சங்கீதப் பயிற்சி அளிக்க பிரபல இசைப் பயிற்சி வித்வான் பாணபண்டிதர் என்பவரது மகளான கண்டிகையை நியமித்தார். இவர்களுக்குத் துணையாக அந்த ஊரின் பிரபல வணிகர் தத்த செட்டியார் குமாரியான உமையாள் என்பவரையும் சேர்த்து மூன்று பேரும் அந்தப் பளிங்கு மாளிகையிலேயே தங்கியிருந்தனர்.

சிவருத்திரரும், உக்கிரகுமாரனும் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த மூன்று பேரழகிகளையும் மணக்க விரும்பிய பக்கத்து நாட்டு மன்னர் தனது நாட்டு பெண்படைகள் மூலமாக மூன்று பேர்களையும் கவர்ந்து சென்றார். இதனால் கவலையடைந்த நள்ளி மன்னர் காட்டிற்குள் சென்று சிவருத்திரரிடம் தனது மகளையும் அவளுடைய தோழிகள் இருவர் என்று மூன்று பேரையும் மீட்டு வரும்படி வேண்டினார்.

சிவருத்திரரும் தன்னுடைய வில்லையும் வாளையும் எடுத்துக் கொண்டு பக்கத்து நாட்டு மன்னரிடம் சென்று போரிட்டு மூன்று பேரழகிகளையும் மீட்டு வந்தார். தங்களை மீட்ட சிவருத்திரரின் அழகிலும் வீரத்திலும் மயக்கமுற்ற மூன்று பேரழகிகளும் சிவருத்திரரையே மணக்க விரும்பினர். மூன்று பேரழகிகளும் தங்களது தந்தைகளிடம் சிவருத்திரருக்கு தங்களை மணம் செய்து வைக்கும்படி வேண்டினர்.

இதன்படி முதலில் பண்டிதர் மகள் கண்டிகைதேவிக்கும் சிவருத்திரருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் கழித்து வணிகர் மகள் உமையாளுக்கும் சிவருத்திரருக்கும் திருமணம் நடந்தது. மூன்றாவதாக மன்னர் மகள் தத்தைக்கும் சிவருத்திரருக்கும் திருமணம் நடந்தது. மூன்று மனைவிகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த சிவருத்திரருக்குத் திடீரென்று தனது தாயின் ஞாபகம் வரவே மன்னரிடம் சென்று ஆப்பனூர் சென்று தன் தாயைப் பார்த்து அழைத்து வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

மன்னர் அனுமதியுடன் ஆப்பனூர் சென்று தன் தாயையும் தங்களுக்கு அடைக்கலம் அளித்து உதவிய சிவகாமியம்மாளையும் தன்னுடன் அழைத்து வந்தார். அரண்மனையில் அவர்கள் நல்ல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மன்னர் தனது மருமகனை மன்னராக்கிப் பார்க்க விரும்பினார்.

தனது அரசபகுதியில் ஒரு பகுதியான சிறுவைநகர்ப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு அரசை உருவாக்கி அதற்கு சிவருத்திரரை மன்னராக்கினார். சிவருத்திரரும் அந்நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஆனால் சிவருத்திரருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் குழந்தைகள் ஏதுமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் சிறுவைநகர்க் குடிகளில் ஒரு பகுதியினரான வேளாண்மைத் தொழில் செய்து வந்த சிலர் சிவருத்திரரை அணுகி தங்களது வேளாண்மைத் தொழில் செய்யும் குலத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினர். குழந்தையில்லாமல் இருந்ததால் மற்ற மூவரும் சிவருத்திரரை புதிதாக ஒரு திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினர். சிவருத்திரரும் இதற்குச் சம்மதித்து வேளாண்மைத் தொழில் செய்து வந்த அபிராமி அங்கசன் என்பவரது மகளான மதி என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.

சிவருத்திரர், மதிக்கும் இல்வாழ்க்கையின் மூலம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு இராவணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அதற்கடுத்து இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இலவன் என்று பெயரிட்டனர். இதையடுத்து பிறந்த பெண் குழந்தைக்கு இந்திரை என்று பெயரிட்டனர்.

இந்நிலையில் முதல் மூன்று மனைவிகளும் தங்களுக்கும் குழந்தைப் பேறு அளிக்க வேண்டி முருகப் பெருமானிடம் வேண்டினர். முருகப் பெருமானும் அவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்குமென்று வரமளித்தார். முருகப் பெருமானின் ஆசியுடன் அவர்களுக்கு குழந்தைப் பேறும் கிடைத்தது.

முதல் மனைவியான கண்டிகைதேவி முதலில் ஒரு ஆண் குழந்தையும், மறுமுறை ஒரு பெண் குழந்தையும் பெற்றாள். அக்குழந்தைகளுக்கு தருமக்கூத்தன், காந்திமதி என்று பெயரிடப்பட்டது. இவ்வாறே இரண்டாவது மனைவியான உமையம்மை பெற்ற ஆண் குழந்தைக்கு தருமன் என்றும், பெண் குழந்தைக்கு மந்திரை என்றும் பெயரிட்டனர். இது போலவே மூன்றாவது மனைவியான தத்தையும் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பெற்றாள். இக்குழந்தைகளுக்கு கலுழன், சுதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

சிவருத்திரரின் ஐந்து ஆண் மக்களான இராவணன், இலவன், தருமக்கூத்தன், தருமன், கலுழன் ஆகியோருடன் காந்திமதி, இந்திரை, மந்திரை, சுதை எனும் பெண் மக்களும் சகல கல்விகளும் பெற்று திருமண வயதை அடைந்தனர்.

இந்நிலையில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்கள் சிவருத்திரரிடம் தங்கள் குலத்தில் பெண் எடுத்து இருப்பதால் தங்களுக்கு சிவருத்திரரிடம் பெண் கேட்டு வந்தனர். இதற்கு சிவருத்திரர் மறுத்தார். அவர்களிடம் தனது பெண்களை வெளியில் கொடுப்பதற்கில்லை என்றும் தமக்குள்ளாகவே ஒரு புதிய முறையுடன் திருமண உறவுமுறை செய்யவிருப்பதாகவும், இது புதிய குலத்தை தோற்றுவிப்பதாக அமையும் என்றும் சொல்லி திருப்பி அனுப்பினார்.

அவர்கள் நள்ளி மன்னரிடம் சென்று முறையிட்டு தங்கள் குலத்தவருக்குப் பெண் கொடுக்க வலியுறுத்தும்படி வேண்டினர். நள்ளி வேந்தரிடமும் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களிடம் சொன்ன கருத்தையே தெரிவித்த சிவருத்திரர் புதிய உறவுமுறைகளுடன் புதிய குலத்தைத் தோற்றுவிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

சிவருத்திரருக்கு முதலில் பிறந்த இராவணன் துறவு மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி விட்டு அனைவரிடமும் விடைபெற்று காட்டுக்குச் சென்றார். சிவருத்திரர் தனது நான்கு மனைவியர்களையும் அழைத்து, தங்களுக்குப் பிறந்த என் குழந்தைகள் அனைத்தும் பொதுவானவை என்றாலும் அந்தக் குழந்தைகள் நான்கு விதமாக அவரவர் தாயின் தன்மையைப் பெறுகிறார்கள். இனி என் குழந்தைகள் அவரவர் தாயின் வழியைப் பின்பற்ற வேண்டும். அந்தந்த குழந்தைகளின் தாய்க்கும் அவர்கள் வந்த வழியில் புதிதாக இல்லம் எனும் புதிய பிரிவுகளை வழிமுறைகளாக அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

மூட்டில்லம்

தனது முதல் மனைவியான பாணபண்டிதரின் மகளான கண்டிகை தேவியை அழைத்து, நீ இந்தக் குடும்பத்திற்கு ஆதி மூட்டானவள். முதலில் இல்லற இன்ப மூட்டியவள். துணி மூட்டும் தொழில் செய்யும் வகுப்பைச் சேர்ந்தவள், வீணை மீட்டும் வீட்டிலிருந்து வந்தவள் ( மீட்டுதல் மூட்டுதல் என மருவியது) என்ற உட்கருத்துக்களுக்கேற்ப அவளை மூட்டில்லத்தாள் என்று அழைத்து, இனி இவள் குழந்தைகள் "மூட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சிவருத்திரருக்கு கண்டிகைதேவி முதல் மனைவியானதால் அவளை முதலில் பெருமைப் படுத்துவது போல மூட்டில்லத்தவருக்கு எவ்விடத்திலும் முதல் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். (இன்றும் இல்லத்துப்பிள்ளைமார் சமுதாய விழாக்களில் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் மூட்டில்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.)

மஞ்சநாட்டில்லம்

எந்தவொரு சுப செயல்களுக்கும் முதலில் மஞ்சளை உபயோகித்து மளிகை வியாபாரம் செய்து வந்த தத்த செட்டியாரின் மகளான உமையாளைப் பார்த்து, "மஞ்சகுப்ப நாட்டில் பிறந்தவள், மேகங்கள் (மஞ்சு) வந்து தூங்கும் அளவிலான உயர்ந்த மாளிகையில் வளர்ந்தவள், மெத்தை (மஞ்சம்) விரித்த வீடுகளில் வசித்தவள் என்ற கருத்துகளுக்கேற்ப மஞ்சநாட்டில்லத்தாள்" என அழைத்து இனி உன் குழந்தைகள் "மஞ்ச நாட்டில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

பளிங்கில்லம்

நள்ளி வேந்தர் குமாரியான தத்தையைப் பார்த்து, "அரண்மனைப் பெண், பளிங்கு மாளிகையில் வசித்தவள் என்று பொருள் விளங்க பளிங்கில்லத்தாள்" என்று அழைத்தார். இனி உன் குழந்தைகள் "பளிங்கில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

சோழிய இல்லம்

வேளாண்மைத் தொழில் செய்து வந்த அபிராமி அங்கசன் மகளான மதியை நோக்கி, "சோழி எனும் மண்வெட்டி முதலிய உழவுச் சாதனங்கள் உடைய வீட்டில் பிறந்தவள், பன்னாங்குழி எனும் சோழியாடியவள், சோழிய வகுப்பினள் எனும் பல கருத்துக்கள் வர சோழியில்லத்தாள்." என்று கூறினார். இனி உன் குழந்தைகள் "சோழிய இல்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

திருமண உறவு முறை

சில மாதங்கள் கழித்து சிவருத்திரர் தனது மக்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். அவர் ஏற்கனவே முடிவு செய்தபடி ஒரு இல்லத்து ஆணுக்கும் மற்றொரு இல்லத்துப் பெண்ணுக்குமாக திருமணம் செய்து கொள்ளும் புதிய வழிமுறையை உருவாக்கினர். இதன்படி,

முதல் மனைவி மகனான மூட்டில்லத்தைச் சேர்ந்த தருமகூத்தனுக்கு நான்காவது மனைவி மகளான சோழிய இல்லத்துப் பெண்ணான மந்திரையையும், இரண்டாவது மனைவி மகனான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த தருமனுக்கு முதல் மனைவி மகளான மூட்டில்லத்தைச் சேர்ந்த காந்திமதியையும், மூன்றாவது மனைவியின் மகனான பளிங்கில்லக் கலுழனுக்கு இரண்டாவது மனைவியின் மகளான மஞ்சநாட்டில்லத்தைச் சேர்ந்த மந்திரையையும், நான்காவது மனைவியின் மகனான சோழிய இல்ல இலவனுக்கு மூன்றாவது மனைவியின் மகளான பளிங்கில்ல சுதையையும் திருமணம் செய்து வைத்தார். இந்தத் தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தாய் எந்த இல்லத்தைச் சேர்ந்தவரோ அதையே இல்லமாகக் கொள்ள வேண்டும். ஒரு இல்லத்தைச் சேர்ந்தவர் அந்த இல்லத்தைத் தவிர பிற இல்லங்களில் மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு புதிய திருமண உறவு முறையை வகுத்தார்.

இந்நிலையில் ஈழ நாட்டு மன்னன் காளகேது என்பவர் தனது மகள் மித்திர சேனைக்கு சுயம்வரம் நடத்துவதால் அதில் கலந்து கொள்ளும்படி அனைத்து நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். இந்த சுயம்வரத்திற்கான அழைப்பு சிவருத்திரருக்கும் வந்திருந்தது.

பலநாட்டு மன்னர்கள் கலந்து கொண்டிருந்த இந்த சுயம்வரத்தில் சிவருத்திரரும் கலந்து கொண்டார். ஒவ்வொரு நாட்டு மன்னர் வீரதீரங்களையும் குறிப்புகளாக ஈழநாட்டு இளவரசி மித்திரசேனையின் தோழிகள் எடுத்துச் சொல்ல அதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த மித்திரசேனை சிவருத்திரரின் கழுத்தில் மாலையிட்டார். சிவருத்திரர் ஐந்தாவதாக மித்திரசேனையை திருமணம் செய்து கொண்டார்.

மித்திரசேனையை மணந்து கொண்ட சில நாட்களுக்குப் பின்பு தனது நாட்டிற்கு திரும்பினார். அவருடன் மித்திரசேனையின் தந்தை காளகேதுவும் வந்தார். சிவருத்திரரின் தாயார் கயல்மணி தேவியை அடையாளம் கண்டு தனது தமக்கையார் என்பதை அறிந்து மகிழ்ந்தார். கயல்மணி தேவிக்கும் தனது மகன் சிவருத்திரர் சகோதரனின் மகளான மித்திரசேனையை மணமுடித்து வந்தது குறித்து மகிழ்ந்தார்.

சிவருத்திரர் மித்திரசேனையுடனான இல்வாழ்க்கை அவர்களுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையையும் பிறகு இன்னொரு ஆண் குழந்தையையும் அடுத்து ஒரு பெண் குழந்தையையும் தந்தது. இவர்களுக்கு முறையே புரந்தர சிங்கம், காரணச்சாமி, மதியம்மை என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஈழமன்னர் காளகேதுவிற்கு குழந்தையில்லாததால் புரந்தர சிங்கம் ஈழமன்னருக்கு குழந்தையாக வழங்கப்பட்டார். சிவருத்திரர் தனது முதல் நான்கு மனைவிகளுக்கும் இல்லம் வகுத்தது போல ஐந்தாவது மனைவிக்கும் இல்லம் வகுத்திட விரும்பினார்.

தோரணத்தில்லம்.

"மித்திரசேனையின் சுயம்வர மண்டபம் முழுவதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதை மனதில் கொண்டும் சுயம்வரத்தின் போது மணமாலைத் தோரணம் கையில் கொண்டு வந்ததையும், அம்மான் (தாய்மாமன்)மகள் என்கிற தோரணையிலும் தோரணத்தில்லத்தாள்" என்று அழைத்தார். இனி உன் குழந்தைகள் "தோரணத்தில்லம்" என்று அழைக்கப்பட வேண்டும் என்றார்.

இதன் பிறகு ஐந்து இல்லங்களைக் கொண்ட புதிய சமூகம் தோற்றுவிக்கப்பட்டது. ஐந்து இல்லங்களைக் கொண்ட இந்த சமுதாயம் தாய் வழியில் தங்களது குடிவழியைக் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த சமுதாயத்தில் தங்கள் இல்லம் தவிர்த்த பிற இல்லங்களில் தங்களுக்கான துணையைத் தேடிக் கொள்ளும் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

இல்லத்துப் பிள்ளைமார் சமுதாய தோற்றம் - வரைபடம்

தற்போதைய இலங்கை (ஈழம்), கேரளா, தமிழ்நாடு என்று பரவலான இடத்தில் பெரும்பான்மையான சமுதாயமாக இருந்த இச்சமுதாயத்தில், தற்போதும் தாய் வழியிலான குடிவழி முறை பின்பற்றப்பட்டு வந்தாலும் நிலப்பகுதி, மொழி போன்றவற்றால் பிரிந்து போய் விட்டனர். தமிழகத்தில் மட்டும் இன்றும் தாய் வழியிலான இல்லம் என்கிற திருமண உறவுகளுக்கான ஆதாரமுறையும், இல்லம் வழியிலான திருமண உறவுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் "சிவருத்திரர் குலம்" என்று அழைக்கப்பட்ட இச் சமுதாயத்தினர் சிறுவைகுடியை ஆட்சி செய்து வந்ததால் சிறுவைகுடி வேளாளர் என்று அழைக்கப்பட்டு பின்பு "சிறுகுடி வேளாளர்" என்று மருவி அழைக்கப்பட்டனர். இதேபோல் சிவருத்திரர் துவக்கத்தில் ஈழத்திலிருந்து வந்ததால் "ஈழவர்" என்றும் , இல்லங்கள் வைத்து உறவு முறை வைத்துக் கொண்டதால் "இல்லத்தார்" என்றும் , எந்தக் கடினமானப் பணியையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் திறனுடையவர்களாக இருந்ததால் "பணிக்கர்" என்றும் இடத்திற்கேற்ப அழைக்கப்பட்டனர்.

இப்படி தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இடத்திற்கேற்ப ஈழவர், பணிக்கர், சிறுகுடி வேளாளர், இல்லத்தார் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட இந்த சமுதாயத்தினர் இன்று "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற ஒரே பெயரால் அழைக்கப்படுகின்றனர். தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் கல்வி, பொருளாதார நிலையில் மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதுவரை நடந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் மற்றும் அரசு பதவிகளில் இந்த சமுதாயத்தினர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தத்தில் சமூக, பொருளாதார நிலைகளில் நல்ல நிலையில் உள்ளனர். இந்த சமூகத்தினர் (தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 

காலஞ்சென்ற நாஞ்சில் கி. மனோகரன் என்பவர் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவர் இந்திய அரசின் மக்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 

வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் என்பவர் இந்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினராக திமுக கட்சியின் சார்பாக ஒருமுறை இருந்திருக்கிறார். 


காலஞ்சென்ற எஸ். முத்து பிள்ளை (முத்தண்ணன் என்று அழைக்கப்பட்டவர்) என்பவர் மதுரை மாநகராட்சி மேயராக (1971 - 1980) இருந்திருக்கிறார். இவரே மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் ஆவார்.

மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டலக் குழுத் தலைவராக இசக்கி முத்து என்பவர் இருந்திருக்கிறார்.

நாஞ்சில் சம்பத்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த இவர், வைகோவுடனான கருத்து வேறுபாட்டுக்குப் பின்பு அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். பின்னர் பிரிந்த அமமுக வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். தற்போது தீவிர அரசியலில் இல்லை.

காலஞ்சென்ற புளியங்குடி க. பழனிச்சாமி  திமுக வில் தலைமைக் கழகப் பேச்சாளர், மாநிலக் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர். வைகோ பிரிவிற்குப் பின்பு மதிமுகவில் அரசியல் ஆலோசகர், மாவட்ட அவைத்தலைவர்.


பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி வரும் இன்றைய நிலையில், துவக்கத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து குடிவழியை தாயின் வழிக்குக் கொண்டு வந்த ஒரு சில சமுதாயத்தில் இந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயமும் ஒன்று என்று அறியும் போது நம்மை வியப்படைய வைக்கிறது.

சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தவரா?

"கேரள மாநிலத்தில் "ஈழவர்" என்ற பெயரிலும், ஆந்திர கர்நாடக மாநிலங்களில் "ஈடிகா" என்ற பெயரிலும் தமிழகத்தில் "இல்லத்துப் பிள்ளைமார்" என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்ற குறிப்பிட்ட ஒரு சாதியினர் ஈழவர் ஆவர். சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. என்கிறது சமூக வரலாற்றறிஞர் சீ.இராமச்சந்திரன், எழுதிய "வலங்கைமாலையும் சான்றோர் சமூக செப்பேடுகளும்" என்ற நூலின் சில வரிகள்.

1564 ஆம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த இராணி மங்கம்மாள் இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்தவர்களைப் பாராட்டும் வழியாக செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அந்த செப்புப் பட்டயத்தில் இருக்கும் தகவல்:

முதலில் அக்கால நடைமுறைப்படி, ராணியின் பராக்கிரமங்களையும், மதுரையம்பதியின் சிறப்பையும் கூறி, அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதரையும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியக் கடவுளையும் போற்றுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரையில் வாழும் ஐந்தில்ல முறைப் பணிக்கமார் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் அன்னதானம் உண்டு பண்ணுவதற்கு மதுரையில் வாழும் ஐந்தில்ல முறையார் முதல் தெற்கே கோட்டாறு, நாஞ்சில் நாட்டுக்கு வடக்கே, மலையாளத்திற்கு கிழக்கே, வடக்கே வேங்கட மலை வரையும், தஞ்சாவூர் உள்ளிட்ட சூரிய கிரகணம் படும் பூமியில் வாழ்ந்து வரும் ஐந்தில்லப் பணிக்கமார் அனைவரும் சேர்ந்து, மதுரையில் கூடி சேர்த்த பொது நிதியைக் கொண்டு சத்திரம் கட்டி, அன்னதானமும், விளக்கு நைவேத்தியமும் உண்டு பண்ணினார்கள் என்றும் கூறி, இவர்களது இந்த சேவை சூரிய சந்திரர்கள் உள்ளவரை தொடரும் என வாழ்த்தி, இவர்களுக்கு யாராவது இடைஞ்சல் செய்தால் காராம்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செப்புப் பட்டயம் பொதுமக்கள் பார்வைக்காக மதுரை அருங்காட்சியகம் வழியாக மன்னர் திருமலை நாயக்கர் மகாலில் வைக்கப்பட்டுள்ளது.

கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுள்ளது. கொங்கு நாட்டுப் பேரூர் "மேலைச் சிதம்பரம்" என அழைக்கப்படும்.


காவல் கோட்டம் நாவல்
மருதநாயகம் பிள்ளை அவர்களின் குடும்பம் தறி நெய்யும் பணியில் ஈடுப்பட்டவர்கள். மேலும் ஈழவர்குரிய தனி சிறப்பு வர்மம் கலையில் தேர்ச்சி பெற்றார் மருதநாயகம் பிள்ளை.
இல்லத்து பிள்ளைமார் (சிறுகுடி வேளாளர்) குலத்தில் பிறந்தவர் பின்னர் முஸ்லிம் மதம் மாறியவர். அவரது வீரம் செறிந்த போர்திறன் பற்றி பேச எல்லோருக்கும் உரிமை உண்டுதான். ஆனால் பிறப்பு பற்றிய பதிவுகள் பிழையாக இருக்க கூடாது.
அவரது பிறப்பை பற்றிய புரிந்துணர்வு இல்லாததால் அவர் எம்மவர் என்று மார்தட்டி வருகிறார்கள்சிலர். ஆனால் மதம்மாறிய ஈழவர் குடும்ப உறுப்பினர் ஆவார் மருதநாயகம் என்ற கான்ஸாகிப் கான்.